கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனுஷ்க விக்ரமசிங்க தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்க தற்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவர் அதிர்ச்சியிலிருந்து மீள பல ஆண்டுகள் செல்லும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் எனவும், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் மக்கள் இரங்கல் குறிப்புகளை எழுதிவைக்க சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகளில் தனுஷ்க விக்ரமசிங்கவும் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒட்டாவா மக்கள் , கனேடியர்கள் மற்றும் இலங்கையர்கள் அளித்த ஆதரவுக்கு தனுஷ்க நன்றி கூறியுள்ளார்.