அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அரசாங்க ஊழியர்களின் ஆதரவு மிக முக்கியம். அரச ஊழியர்களின் சம்பளமும் கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்டது என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடந்த போராட்டங்களின் போது ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் அனைத்து அரச அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன் இதுபோன்ற கூட்டம் நடந்ததில்லை. கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை முறியடிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
அன்று நாம் இருந்த நிலையை மறந்துவிடக் கூடாது. கடந்த நெருக்கடியான காலத்தில், நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தில் நீங்கள் இரவும் பகலும் சிறந்த சேவையைச் செய்தீர்கள்.
மேலும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உங்கள் அனைவரினதும் ஆதரவும் எங்களுக்குத் தேவை. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனாதிபதி அதிகரித்தார்.
மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. நாட்டு மக்கள் அனைவருக்கும் சலுகைகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
விருதுகள், கௌரவங்கள் பெற வேண்டுமானால் நேர்மையாக மக்கள் சேவை செய்ய வேண்டும். கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஜனாதிபதி மாத்திரமன்றி அமைச்சர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்பதைக் கூற வேண்டும் என குறிப்பிட்டார்.