இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் கோப்பையில் பங்கேற்கும் இரண்டு இந்திய அணி மேலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கண்டியில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயசெய்வதற்காக இரு மேலாளர்களும் தங்களை அணுகியதாக ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் குற்றம் சாட்டியதாக லங்காதீப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டங்களின்படி, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $555,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.