ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பிற்பகல் கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார்.
இரோமி விஜேவர்தன அவர்களின் கலை வாழ்க்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு’Celebration of women’ எனும் தொனிப்பொருளில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஓவியக் கண்காட்சிகளை நடாத்தும் வின்ஸ்டன் சுலுதாகொட தனது 34 ஆவது ஓவியக் கண்காட்சியை ‘பாவனவக சாந்திய'(தியானத்தின் அமைதி) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தார்.
46 வருடங்களாக ஓவியத் துறையில் ஈடுபட்டு வரும் வின்ஸ்டன், வெளிநாடுகளிலும் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
அன்றாட வாழ்க்கை உறவுகள், உலகளாவிய நெருக்கடிகள், மத வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட பல வண்ணமயமான ஓவியங்கள் இந்த ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெற்றிருந்தன.ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட வந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, சில குழு புகைப்படங்களிலும் இணைந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி தயான் ஜயதிலக்க, சுஜன் விஜேவர்தன, லுசில் விஜேவர்தன, நடாலி விஜேவர்தன, மாலன் ஜயவர்தன, ரோஷினி குணரத்ன,சிரானி தேனபது, நிஹால் தேனபது மற்றும் மூத்த கலைஞர் எஸ். எச். சரத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.