இலங்கையில் உள்ள குவைத் நாட்டு தூதுவர் கலாப் எம். எம். பு தஹைர்(Khalaf M.M. Bu Dhhair)அவர்களை,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி (East Ceylon Arabic College) பணிப்பாளர் சபையின் சார்பிலும் ,அதிபர் உட்பட விரிவுரையாளர்கள் சார்பிலுமான பிரதிநிதிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை(13) தலைநகர் கொழும்பில் உள்ள அந் நாட்டுத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, பிரஸ்தாப அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அரபுக் கல்லூரிக்கும் குவைத் நாட்டிற்கும் இடையிலான நீண்டகால நல்லுறவை நினைவு கூர்ந்த தூதுக்குழுவினர், அந்நாட்டு நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டடத்திற்காக தூதுவரிடம் நன்றி தெரிவித்துள்ளனர். அதற்கான தளபாடங்களையும் தேவையான உபகரணங்களையும் பெற்றுத் தருமாறும் அவர்கள் தூதரிடம் வினயமாக வேண்டிக் கொண்டுள்ளனர். அத்துடன் பழைய கட்டடத்தை முற்றாக அகற்றிவிட்டு ,அவ்விடத்தில் புதிதாக கட்டிடமொன்றை நிர்மாணித்து தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்களின் வேண்டுகோள்களையிட்டு உரிய கவனம் செலுத்தப்படுமென குவைத் நாட்டுத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தூதுவரைச் சந்தித்தஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான இந்தக் குழுவில் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பதில் தலைவரும்,இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண சபை செயலாளருமான யு. எல் .ஏ .அஸீஸ்,பணிப்பாளர் சபை உறுப்பினர்களான மௌலவி ஏ .எல். காசிம்(ஷர்க்கி), ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி யூ.எல்.வாஹித்,டாக்டர் கே. எல்.நக்பர், அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.அஷ்ரப் (ஷர்க்கி) விரிவுரையாளர்களான மௌலவி அஸீஸ் ரஹ்மத்துல்லாஹ்(ஷர்க்கி), கலாநிதி யூ .எல். எம். அஸ்லம்(ஷர்க்கி) மற்றும் கல்முனை முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்
.தமிழ்நாட்டைச் சேர்ந்த உலமாக்களும் இந்த கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.