சவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நன்றியும் கூறினார்.
கொழும்பு வெஸ்லி கல்லூரி 1874 ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் போது மெதடிஸ்ட் மிஷனரி கல்வி முறையின் கீழ் நிறுவப்பட்டது. இக்கல்லூரி இலங்கையின் சுதந்திரப் போரின் முன்னோடிகள், ஆளுநர்கள், ஜெனரல்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்குச் சேவையாற்றிய பல முக்கியஸ்தர்களை உருவாக்கியிருந்தது.
இந்த நிகழ்வில் “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எதிர்கால கற்பித்தல் முறைமை” என்ற தலைப்பில் கல்லூரியின் பழைய மாணவரும் ஐக்கிய அமெரிக்காவின் சென் டியோக் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர்.சோமநாதன் சிறப்புரை ஆற்றினார்.
எல்ஸ்டன் கொக், லெனரோல் சசோரர்கள் உள்ளிட்ட பிரசித்தமான பாடகர்களின் நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டுப் பூர்த்தி விழாவிற்கு ஜனாதிபதியின் வருகையை அடையாளப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட நினைவு பரிசொன்றும் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வௌியிடப்பட்ட சஞ்சிகையொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.