இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான தேசியப் போட்டியான ‘SPARK’, உலக தொழில்முனைவோர் தினத்துடன் இணைந்தவாறு, அதன் மாபெரும் இறுதிப்போட்டியை ஓகஸ்ட் 21ஆம் திகதி விமர்சையாக நடாத்தியிருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், சிக்கல்களுக்கு தீர்வு வழங்குபவர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட, 15-24 வயதுடைய படைப்பாளிகள், மாற்றத்தை ஏற்படுத்தும் தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தி SPARK 2023 விருது விழாவில் போட்டியிட்டனர்.
SPARK 2023 இன் வெற்றியாளரான மிஹிந்தி மினுபமா பண்டார தனது கருத்துகளை வெளியிடுகையில், “SPARK போட்டியில் வெற்றி பெற்றமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இது என்னைப் போன்ற இளம் தொழில்முனைவோருக்கு, எமது யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வழிகாட்டல்களைப் பெறவும், திறன்களை மேம்படுத்தவும், அதிகளவில் கற்றுக்கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இதன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்திலும் நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
இதற்காக, நாடு முழுவதிலும் இருந்து 400 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், முதல் 5 இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள், தங்களது வியாபார யோசனைகளை நடுவர் குழாம் முன்னிலையில் முன்வைத்தனர். இந்த நடுவர்கள் குழாமில் பிரதமரின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, ThreadWorks இன் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி ஜெஹான் டி சொய்சா, Hemas Holdings PLC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் நிர்வாகப் பணிப்பாளருமான, கஸ்தூரி செல்லராஜா வில்சன், களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலிங்கமுதலி, Remedium One பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமந்தா ரணதுங்க, களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வன்னிநாயக்க, Dialog Axiata PLC நிலைபேறானதன்மை நடைமுறைப்படுத்தல் நிபுணர் ரக்ஷிகா நெடுமாறன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
பல்வேறு தொழில்முனைவு சூழல் பங்குதாரர்கள், செல்வாக்குச் செலுத்துவோருடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட SPARK ஆனது, ஏனைய போட்டிகளிலிருந்து தனித்துவமானதாக, பாடசாலை மட்டத்திலிருந்தான இளைஞர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் பங்கேற்பாளர்களின் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு மனநிலையை மேமப்படுத்துவதில் அது அர்ப்பணிப்புடன் உள்ளது. SPARK ஆனது இறுதிப் போட்டி நோக்கிய பயணத்தில், 100 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சி அமர்வுகளை முன்னெடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து முதல் 35 போட்டியாளர்களுக்கான விசேட 2 நாள் boot camp இடம்பெற்றது.