‘எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்’ எனும் தொனிப்பொருளில் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ‘IORA’ தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியம் எனப்படும் IORA சங்கம்1997 இல் நிறுவப்பட்டு, இந்த ஆண்டு அதன் 27 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
சதுப்புநில சுற்றுச்சூழலை மீளமைப்பதற்கான முன்முயற்சிகளுக்காக கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் முக்கிய மறுசீரமைப்பு விருது இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அதன்படி, சமுத்திர பாதுகாப்பு மற்றும் அதன் நிலையான அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்னணி நாடாக இலங்கை மாறியுள்ள இந்தத் தருணத்தில், 2024 ஆம் ஆண்டிற்கான ‘IORA’ தினத்தை இலங்கையில் நடத்துவது விசேட அம்சமாகும்.
பல்வேறு செயற்பாடுகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களினாலும் எமது நாட்டு அரசு நிறுவனங்களினாலும் நிறுவப்பட்ட கண்காட்சி கூடங்களையும் பார்வையிட்டார்.
முப்படை வீரர்களின் பரசூட் கண்காட்சி இந்த நிகழ்வை வண்ணமயமாக்கியதுடன், பொலிஸ் குதிரைப்படை பிரிவின் குதிரைப்படைக் கண்காட்சியும் இடம்பெற்றது.
‘எதிர்கால சந்ததியினருக்கு நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஓவியம் மற்றும் சமூக ஊடகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், 2024 ஆம் ஆண்டில், இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் 27 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கடல்வாழ் உயிரினங்களின் வடிவத்திலான அழகான பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியச் செயலாளர் நாயகம் சல்மான் அல் பாரிசி, உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திர அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.