இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச “உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்” வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டு விசேட கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றன.
அவற்றில் ஒரு கலந்துரையாடல் ஹிமாலயன் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல நிபுணத்துவ அறிவுள்ள பல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. அடுத்த கலந்துரையாடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்தும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இணைந்திருந்த நபர்கள் அதற்கு முழுமையாக பங்களிப்பதோடு ஆலோசனைகளையும் யோசனைகளையும் முன்வைத்தனர்.
1983 – 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
1983 – 2009 ஆண்டுக்கு இடையிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இந்த ஆணைக்குழு சட்டமூலமொன்றைத் தயாரிக்கவுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டத்தை உருவாக்கும் செயல்முறையில் கவனம் செலுத்துவதுடன், மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு களப்பயணங்கள் நடத்துதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் மற்றும் கருத்துக்களைப் பெறுதல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரை இணைத்துக்கொள்வதற்கான மூலோபாயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
2016-2018 காலப்பகுதியில் செயற்பட்ட ஆலோசனை செயலணியினால் இந்த வரைபு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைப் பணிகள் மற்றும் கடந்த காலத்திலும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தால் பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை மற்றும் தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆலோசனைப் பணிகள் குறித்தும் இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
வினைத்திறனான நல்லிணக்கச் செயன்முறை மற்றும் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குள் ஒரு ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தையும் இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மக்கள் நிலைப்பாட்டினை ஒருங்கமைத்தல் மற்றும் இன ரீதியான கருத்தியல்களை உருவாக்குவதற்கான ஊடகங்களின் இயலுமை, தேசிய நல்லிணத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் வகிபாகம் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதோடு, இதன்போது ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
ஆணைக்குழுக்களின் கட்டமைப்பு, பல்வேறு நிபுணர்களின் தெரிவு மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக சிவில் அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
ஆணைக்குழுக்களின் அதிகாரம், ஆணையாளர்களை நியமிக்கும் முறைமை, ஆலோசகர்கள் குழு, கண்காணிப்புக் குழுவின் பணிகள் தொடர்பிலும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயற்குழுவின் இடைக்கால செயலக பிரதிநிதிகளுக்கு இதன்போது, விளக்கமளிக்கப்பட்டது.
உண்மையைக் கூறுவதை மேம்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தை மீளப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை நோக்காக கொண்டு இதற்கான உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளல் தொடர்பிலான யோசனைகளையும் பெற்றுத்தருமாறு இடைக்கால செயலக பிரதிநிதிகள் கோரினர்.
இந்த ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் பெறப்பட்ட பல யோசனைகள் ஏற்கனவே சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், விரிவாக கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
வண. கழுபான பியரத்தன தேரர், கலாநிதி ஜெஹான் பெரேரா, கலாநிதி ஜோ விலியம், கலாநிதி தயானி பனாகொட, விசாகா தர்மதாச, வீ.கமலதாச உள்ளிட்டவர்களுடன் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலான பரந்த செயற்பாடுகள் மற்றும் விருப்பத்துடன் செயலாற்றும் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச மற்றும் கொள்கைப் பிரிவின் தலைவர் கலாநிதி சி.வை. தங்கராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.