1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 இன் ஊடாக மேலும் அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பல பிரிவுகள் ஊடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அறிவிப்பதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண பகிரங்க சேவையின் பணியாட்தொகுதி அலுவலர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நீதிபதிகள் மற்றும் அரச அதிகாரிகள்,அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரச அலுவலர்கள், அமைச்சுகள் மற்றும் அரசாங்க திணைக்களங்களின் அதிகாரிகள், அரசியலமைப்பின் 41அ(1)(உ) எனும் உறுப்புரையின் நியதிகளின் படி நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள், அரசியலமைப்பின் 41ஆ உறுப்புரைக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எவையேனும் ஆணைக்குழுக்களின், விடயத்திற்கேற்ப, தலைவர்கள் அல்லது உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் ஆகியோரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் பணியாட்தொகுதி அலுவலர்கள், அரசியலமைப்பின் 41அ (1)(இ) உறுப்புரையின் கீழ் அல்லது எதேனும் நியதிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஏதேனும் நியதிச்சட்டத்தினால் அல்லது அதன் கீழ் தாபிக்கப்பட்ட சுயாதீன ஒழுங்குபடுத்துகை மற்றும் மேற்பார்வை ஆணைக்குழுக்களின் அல்லது குழுக்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஏதேனும் நியதிச் சட்டத்தினால் அல்லது அதன் கீழ் நிறுவப்பட்ட அரச சபைகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அலுவலர்களும் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தரைப்படைச் சட்டத்தின் (357 ஆம் அத்தியாயமான) ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆட்சேர்க்கப்பட்டு பேணப்படும் இலங்கை தரைப்படையின் அலுவலர்கள், கடற்படைச் சட்டத்தின் (358 ஆம் அத்தியாயமான) ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆட்சேர்க்கப்பட்டு பேணப்படும் இலங்கை கடற்படையின் அலுவலர்கள்,விமானப்படைச் சட்டத்தின் (359 ஆம் அத்தியாயமான) ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆட்சேர்க்கப்பட்டு பேணப்படும் இலங்கை விமானப்படையின் ஆணைபெற்ற அலுவலர்கள், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம், 1988 ஆம் ஆண்டின் இலக்கம் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (262 ஆம் அத்தியாயம்), உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம் அல்லது தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டம் அல்லது (138 ஆம் அத்தியாயம்), தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழான தேர்தல்களின் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் பதவிநிலை அதிகாரிகள். தொழில் சங்கங்கள் (138 ஆம் அத்தியாயமான) கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகாரிகள், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்,1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (262 ஆம் அத்தியாயம்), உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம் அல்லது தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நடைபெறவேண்டியுள்ள தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோரும் தமது விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பதிவுபெற்றுள்ள அக்கம்பனிகளில் 25 சதவீதத்திற்குக் குறையாத பங்குகள் அரசினால் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்றினால் வைத்திருக்கும் அந்தக் கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், மற்றும் பணியாட்தொகுதி அலுவலர்கள், இச்சட்டத்தின் கருத்தெல்லைக்குள்ளான அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிதிநிறுவனங்களின் முகாமைத்துவ அல்லது மேற்பார்வைசார் வகிபாகங்களிலுள்ள பணியாட்தொகுதியினரும் புதிய பட்டியலில் அடங்குவர். அடங்குகின்றனர்.
மேலும், இலங்கை ராஜதந்திர தூதரகப் பிரதானிகள், இலங்கையின் இராஜதந்தித் தூதரகங்களுக்கு அமைச்சர்களினால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், செய்தித்தாள் கட்டளைச் சட்டத்தின் (180 ஆம் அத்தியாயமான) 2ஆவது பிரிவின் கீழ் எந்தச் செய்தித்தாள்கள் தொடர்பில் வெளிப்படுத்துகைகள் செய்யப்பட்டுள்ளனவோ அந்த செய்தித்தாள்களின் உரிமையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்பீட பணியாட்தொகுதியின் உறுப்பினர்கள்,1991 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க, இலங்கையின் தொலைத் தொடர்பாடல் சட்டத்தின் 17ஆவது பிரிவின் கீழ் உரிமம் அளிக்கப்பட்ட ஊடக கம்பனிகளின் உரிமையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் பதிப்பாசிரியர் பீட பணியாட்தொகுதி உறுப்பினர்கள்,1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் நியதிகளின் படி தாபிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகத்தின் பதவிநிலை அதிகாரிகள்,மற்றும் வேறு அலுவலர்களின் அந்தந்த அலுவலகங்களில் அவர்கள் புரிகின்ற பணியின் தன்மையைக் கவனத்தில் கொண்டு அத்தகைய அலுவலர்கள் இலஞ்சத்துக்கு அல்லது ஊழலுக்கு பலியாகக் கூடிய தன்மையைக் கருத்திலெடுப்பதன் மூலம் உயர் ஆபத்து வகுதிகளை ஒழுங்குவிதிகளினால் விதத்துரைக்கப்படக் கூடிய, அத்தகைய வேறு அலுவலர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிட வேண்டும்.
மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்காக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டமைப்பை, முறைப்படி தொடங்கும் வரை புதிய சட்டத்தின் விதிகளின்படி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அறிவிக்கும் மாதிரியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அகியவற்றை வெளியிடுவது தொடர்பான முறைமை உள்ளடங்கிய சுற்றுநிருபம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை வெளியிடுவது தொடர்பான திருத்தப்பட்ட மாதிரிகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 01-03-2024 முதல் பதிவிறக்கம் செய்ய முடியும்.
மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம், மறு அறிவித்தல் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.