நிலத்தினை இழந்த மக்களினால், தமது காணிகளை மீளத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி பல்வேறுபட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டும,; இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான தீர்வுகளும் கிடைக்கப்பெறவில்லை. எனவே ‘நிலத்தினை இழந்த மக்களின் குரல்’; என்னும் அமைப்பினால், வடமாகாணம் முழுவதும் தபால் அட்டை கவனயீர்ப்பு (Post card Camping ) போராட்டம் முன்னெடுக்கப்பட திட்மிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆரம்பநிகழ்வானது, மன்னார் மாவட்டத்தில் 04.03.2024 (திங்கட்கிழமை) இன்று காலை 10.00 மணிக்கு மன்னார் நகர RDF மண்டபத்தில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மன்னார் நகரம், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு போன்ற ஐந்து பிரதேச செயலக பிரிவிலும் இருந்து, தமது சொந்த நிலங்களை இழந்து போராடிப் போராடி தீர்வு கிடைக்காத வலி நிறைந்த வாழ்க்கையுடன் வாழும் மக்கள் கலந்து கொண்டார்கள்.
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ என்ற தொனிப்பொருளில் மன்னார் மாவட்டச்சமூகம் ஒன்றிணைந்து, மக்களின் ஒருமித்த குரலாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் தலைமையுரையினை நிறுவன பணிப்பாளர் ஆற்றியிருந்தார். அதில் அவர், மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதன் மூலம்தான் தங்களது உரிமைகளை இந்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதற்காகப் போராட வேண்டிய தேவை உள்;ளது என்பதனை வலியுறுத்தியிருந்தார். இந்நிகழ்வானது, மன்னார் மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தின் 5மாவட்டங்களிலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதோடு 5000 தொடக்கம் 10000வரையிலான தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வருகை தந்திருந்த நிலத்தை இழந்த மக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள,; தங்களது பிரதேசங்களில் காணி இழந்த மக்கள் படும் துன்ப துயரங்களை விரிவாக எடுத்துக் கூறினார்கள். இறுதியில் பங்குபற்றியிருந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று மன்னார் நகர அஞ்சலகத்தில் ஐனாதிபதிக்கான தங்களது காணி இழப்புப்பற்றிய விபரங்களை தபால் அட்டை மூலமாக அனுப்பிவைத்தார்கள். இந்நிகழ்வில் 94பங்கேற்பாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.