பாடங்களின் போது மாணவர்களின் கவனச்சிதறல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வருகின்ற ஜனவரி 1, 2024 முதல் நெதர்லாந்தில் உள்ள பாடசாலை வகுப்பறைகளில் கைப்பேசி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் பெருமளவில் தடை செய்யப்படும் என்று டச்சு அரசாங்கம் கூறியுள்ளது.
“கைப்பேசிகள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தாலும், அவை வகுப்பறையில் சேராது” என்று நெதர்லாந்து கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்கிராஃப் கூறியுள்ளார்.
மேலும் கையடக்க டிஜிட்டல் சாதனங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு இடையூறு என்று அறிவியல் ஆராய்ச்சி காட்டுவதாகவும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அமைச்சகம், பள்ளிகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதனங்கள் குறிப்பாக தேவைப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும், உதாரணமாக டிஜிட்டல் திறன்கள் குறித்த பாடங்களின் போது, மருத்துவ காரணங்களுக்காக அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.