பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025″இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk ஊடாக விண்ணப்பத்தையும், அதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மூன்று மொழிகளும் பெற முடியும். சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.03.2024 திகதிக்கு முன் மாணவர் கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தப் புலமைப்பரிசில் பெறுவோரைத் தெரிவு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு வலய/மாகாணக் கல்வி அலுவலகங்களுக்கும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம் வலய மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர் தலைமையிலான குழுவினால் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அளவுகோல்களையும், விதிகளையும் கருத்தில் கொண்டு இந்தக் குழுக்கள் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். மேலும் குழு உறுப்பினர்கள் இந்தச் செயல்பாட்டில் முழு நம்பகத் தன்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது. மேலும், இந்தப் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான எந்தவொரு விண்ணப்பமும் நேரடியாக ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பப்படக் கூடாது என ஜனாதிபதி நிதியம் வலியுறுத்துகிறது.
பாடசாலைகளால் தெரிவு செய்யப்பட்ட தகுதியான புலமைப்பரிசில் பெறுவோரின் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் கல்வி அமைச்சினால் ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பிய பின்னர், இந்த உதவித் தொகைகள் ஏப்ரல் 2024 முதல் அடுத்த 12 மாதங்களுக்கு வழங்கப்படும். இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி முதலாம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த முழுத் திட்டத்திற்காகவும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக்குறைந்த வசதிகளுடன் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்குவதும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்வதுமே இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.