உடல்நலக்குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் 03.03.2024 காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், சாந்தனின் பூதவுடல் 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30க்கு கிளிநொச்சி பசுமை பூங்காவில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2மணி முதல் 3மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன்பின்னர், 03.03.2024 மாலை அவரது பூதவுடல், அவரது சொந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளைய தினம் எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் என்ற சுதேந்திர ராசா சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.
குறித்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக கடந்த 28ஆம் திகதி காலை உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உயிரிழந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இதேவேளை, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை அவர்களது சொந்த நாடுகளுக்கு செல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்திய மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 03.03.2024 துக்கதினமாக அனுஸ்டிக்க வடக்கு மற்றும் கிழக்கு பொது அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.