இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார்.
1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின் போது சுயஸ் கால்வாய் மூடப்பட்டதன் காரணமாக 10 வருடங்களாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்நாட்டு துறைமுகங்களின் பெறுமதியை பேணுவதற்காக சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
திருகோணமலை கடற்படை முகாமில் 01.03.2024 இடம்பெற்ற இலங்கை கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்குச் சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டின் கடல்சார் இலக்குகளை நனவாக்குவதற்காக அர்ப்பணிக்கும் இலங்கை கடற்படையின் சிறப்புக் கப்பல் படையணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்ணங்கள் வழங்கினார்.
கடற்படையின் விசேட கப்பல் படையணியின் கப்பல்களால் கடல் பரப்பில் நிகழ்த்தப்பட்ட சாகசங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கியது.
அதனையடுத்து, முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படகில் சென்று கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கஜபாஹு, சமுதுர, பராக்கிரமபாகு, சாகர, உதாரா, சக்தி, நந்தமித்ர, சயூரல ஆகிய போர்க்கப்பல்களை கண்காணித்தார்.
இதன்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து கடற்படை முகாமின் பதிவேட்டில் ஜனாதிபதி குறிப்பொன்றையும் பதிவுசெய்தார்.