ஐ. ஏ. காதிர் கான் –
கொழும்பு – பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி வளவில், கடந்த 78 வருடங்கள் மிகவும் பழைமை வாய்ந்த கட்டிடத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றி, புதிய வகுப்பறை, கேட்போர் கூடம் மற்றும் கற்றல் நடவடிக்கைக் கட்டிடங்கள் என்பன, மிக விரைவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக, கல்லுாாி அதிபர் நஸ்ரியா முனாஸ், பழைய மாணவிகளின் உப தலைவி பெரோஸா முஸம்மில், பழைய மாணவிகளது நிர்வாகக் குழு மற்றும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இணைந்து நிதி திரட்ட முன் வந்துள்ளனர்.
இதன் ஒரு அங்கமாக இக்குழுவினர், ”மர்ஹபா – 24″ ரமழான் முன் விற்பனைக் கண்காட்சிக் கூடமொன்றை, இன்று (24) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, கொழும்பு – 10, (லேக்ஹவுஸ் எதிராக) அமைந்துள்ள “எக்ஸ்பிஷன் கொன்வன்ஸன் சென்டரில் நடாத்தவுள்ளனர்.
அனுமதிச் சீட்டு மற்றும் விற்பனையின் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும், கல்லூரியில் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்காகவே திரட்டப்படுவதாக, கல்லூரி அதிபர் நஸ்ரியா முனாஸ் தெரிவித்தார்.
அத்துடன், இப்புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தமது இயன்றளவிலான பூரண ஒத்துழைப்புக்களைத் தந்துதவுமாறும், அதிபர் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தினர், அனைவரிடமும் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவிகள் கல்வி பயின்ற இக் கல்லுாாியின் கண்காட்சிக் கூடத்திற்கு, பழைய மாணவிகள் அனைவரும் வந்து பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.