இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியனுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், 120 மெகாவொட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு வழங்கும் உமா ஓயா நீர் மின்சாரத் திட்டத்திற்கு ஈரானுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டம், மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக, 50 ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கான 145 மில்லியன் கனமீற்றர் நீரை வழங்குகிறது.
வெற்றிகரமான இந்த திட்டம் குறித்து திருப்தியடைவதாக தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர், வலுசக்தி, நீர், விவசாயம், நானோ தொழில்நுட்பம், மருந்து மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தங்களது நிபுணத்துவத்தை பயன்படுத்தி எதிர்கால திட்டங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஈரான் ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தேயிலைக்காக ஈரானின் மசகு எண்ணெய் பரிவர்த்தனை வர்த்தக உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டமை குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
மசகு எண்ணெய்க்காக ஈரானுக்கு இலங்கை செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலர்களுக்காக இலங்கையில் இருந்து தேயிலையை பெற்றுக் கொள்வதற்கு ஈரான் ஒப்புக்கொண்டது.