பாடசாலைகள் அமைக்கப்படுவது இன முறுகலை உருவாக்க அல்ல – மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் மாகாண சபையின் முறையான அனுமதியுடன் இயங்கும் ஒரு பாடசாலையை மூட முயற்சிக்க வேண்டாம் –
சிகரம் சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தை மூடிவிடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா இன்று நாடாளுமன்றத்தில் கண்டனம் –
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகரம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தை இன ரீதியாக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சி என காரணம் காட்டி அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வியாளேந்திரன் அவர்களால் இன்று பாராளுமன்றில் கூறப்பட்ட போது பாடசாலையை மூடும் நடவடிக்கைக்கு தனது முழு எதிர்ப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் வெளியிட்டார்கள் .
இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்களது குறித்த உரையின் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் இங்கு குறிப்பிடுகையில்-
எந்த ஒரு பகுதியிலும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் பாடசாலைகள் அமைக்கப்படுவது கிடையாது , குறித்த பாடசாலையானது புதிதாக உருவாக்கப்படும் ஒன்றல்ல , கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மாகாண சபையின் முறையான அனுமதிகளை பெற்று இயங்கி வருவதுடன் , அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போன்று இங்கு 5, 10 பிள்ளைகள் கல்வி கற்கவில்லை, சுமார் 40 மாணவர்களுடன் இயங்கி வருகின்றது , இது ஒரு புதிய பாடசாலை அல்ல – இப்பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழும் பிரதேசம் , இங்குள்ள மக்கள் இனமுறுகலை தவிர்த்து நல்லிணக்கத்தை பேணுபவர்கள் என்பது கெளரவ அமைச்சர் வியாளேந்திரன் அவர்களுக்கும் நன்கு தெரியும் , ஆனால் இந்த பாடசாலையை மூடிவிடும் அவசர செற்பாட்டின் பின்புலம் என்ன என்று பார்த்தால் -தற்போது நிதி அமைச்சினால் புதிதாக மதுபானசாலைகளை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் , இவ்வாறான மதுபானசாலையின் உருவாக்கத்திற்கு மத வழிபாட்டுத் தளங்கள் , பாடசாலைகள் என்பன தடையாக இருக்கும் என்பதற்காக இங்கு இந்த பாடசாலையை மூடி விடும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் குறிப்பிடுகின்றார்கள் –
குறித்த பாடசாலையை அனுமதி மறுப்பது தொடர்பில் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போது எனது பக்க கருத்துக்களை ஏற்றுக்கொண்ட கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் உடனடியாக இப்பாடசாலைக்கு சென்று உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட பணிப்பிற்கு அமைய 2019 ஆம் ஆண்டில் அனுமதி கிடைக்கப்பெற்று 2020 முதல் இன்று வரை இயங்கி வரும் ஒரு பாடசாலை எனும் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
ஆகவே பாடசாலைகள் அமைக்கப்படுவது இன முறுகலை ஏற்படுத்துவதற்கு அல்ல என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன் என குறித்த பாடசாலையினை மூடும் முயற்சிக்கு தனது பலத்த எதிர்ப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் இங்கு வெளியிட்டார்கள் .