உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
உத்தேச கடற்றொழில் சட்டத்தின் ஊடாக மீனவ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 20.02.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீன்பிடித் தொழில் வளர்ச்சியின் மூலம் மீன் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச கடற்றொழில் சட்டமூலம் தொடர்பில் மீனவத் தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி, திருத்தங்களைச் செய்து, அதனைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குத் தேவையான பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய சட்டத்தின் மூலம் மீனவ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம். வெளிநாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்காக இலங்கைக்கு வருவதற்கு இதன்மூலம் வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை.
மேலும், மீன்பிடித் தொழிலின் வளர்ச்சிக்காக தனியார் துறை முதலீடுகளை எதிர்பார்த்துள்ளோம். மேலும், வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் துறையை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் மீன்வளர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறன.
மேலும், அதிகரித்து வரும் கடல் வெப்பம் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலால், உலகில் மீன் வளம் குறைந்து வருகிறது. தற்போது நாடளாவிய ரீதியில் நீர்வாழ் விலங்குகளின் உணவுக்காக இறால், நண்டு வளர்ப்பு மற்றும் கடற்பாசி வளர்க்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நீர்கொழும்பு மீனவர்களின் மீன் சந்தை விவகாரத்திற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும். நீர்கொழும்பு மீனவர்கள் கார்டினல் அவர்களின் வாசஸ்தலத்திற்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறியக்கிடைத்தது. அது கத்தோலிக்க திருச்சபைக்கும் மீனவர்களுக்குமான பிரச்சினை. இருந்த போதிலும், அது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எங்களுக்கு நேரடியாக அந்த விடயம் சம்பந்தம் இல்லாவிட்டாலும் கடற்றொழில் மக்கள் என்ற வகையில் ஒரு தார்மீகப் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. அந்த வகையில் அங்கு நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஒரு சுமூகமான, நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.