கடவத்த மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவப் பாராளுமன்ற முதல் அமர்வு 19.02.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு மாணவிகளுக்கு கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மாணவிகளை அங்கு அழைத்துச் சென்ற ஜனாதிபதி, அமைச்சரவை என்றால் என்ன, அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
நாட்டின் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற பிரதான இடமான அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்துரையாடும் சந்தர்ப்பம் பாடசாலை மாணவிகளுக்கு கிடைத்தமை விசேட அம்சமாகும்.
மாணவப் பாராளுமன்றத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவிகளுக்கு அமைச்சர்களின் பொறுப்புகள், பணிகள் மற்றும் அமைச்சரவையின் பொறுப்புகள் குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினர் அரச நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்த சந்திப்பில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களும் உடனிருந்தார்கள்.
தனது பாடசாலை மாணவிகளுக்கு கிடைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு குறித்து கடவத்த மகாமாயா மகளிர் கல்லூரி அதிபர் டபிள்யூ.ஆர்.பிரியதர்ஷினி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்தார்.