இலங்கையின் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சத்திர சிகிச்சை உபகரண பட்டியலின் முன்னுரிமை அடிப்படையில் சுமார் 3800 உபகரணங்கள் தட்டுப்பாடாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மொத்தமாக 5800 உபகரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் வைத்தியசாலை கட்டமைப்பில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதயத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ரென்த் வகைகள், கண்களுக்கு பயன்படுத்தப்படும் லென்ஸ் வகைகள், கண் சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு தட்டுப்பாடாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கூடுதல் விலைக்கு மருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவருடன் தொடர்பு பேணிய அதிகாரிகள் அந்தந்த பதவிகளில் நீடித்து வருவதனால் மோசடிகள் முழுமையாக இல்லாது ஒழிக்கப்படவில்லை என டொக்டர் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை நீக்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரியுள்ளார்