காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதல், விவரிக்க வார்த்தைகள் போதாத ஒரு ஆக சிறந்த உணர்வு ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கிறது. பல்வேறு தருணங்களின் உறவுகளில் முறைக்கு ஏற்று காதல் விதவிதமாக வெளிப்படுகிறது. மனித இனத்தின் உயரிய இந்த காதலை அனுசரிக்கும் ஒரு நாள் தான் காதலர் தினம். இந்த தினத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற அதற்கான கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு அனுசரிக்கப்படுகிறது.
காதலர் தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவேதான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார்.
இந்த சூழலில்தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்தபோது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.