கொழும்பு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த சனி மற்றும் ஞாயிறு (10,11) ஆகிய தினங்களில், ஒலுவில் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை (10) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்பமானது. இந்த 16 ஆவது பொது பட்டமளிப்பு நிகழ்வில், 1441 உள்வாரி பட்டதாரிகளும், 711 வெளிவாரி பட்டதாரிகளுமாக மொத்தம் 2152 பட்டதாரிகள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதில் முதலாம் நாளின் முதலாவது அமர்வில், கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும், மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (11) பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபரின் வழிகாட்டலில், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பற்றது.
இதில் முதலாவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகளும், இரண்டாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த 350 பட்டதாரிகளும், மூன்றாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இது தவிர, நான்காவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை வணிக நிர்வாகத்தில் 09 மாணவர்களும், 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமாவில் 09 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அத்துடன், இரண்டாம் நாள் நிகழ்வில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல்-ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் ஞாபகார்த்த விருதினை ஜுனைடீன் பாத்திமா ஷனா பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ துறையில் சிறந்த மாணவருக்கான விருதினை முஹம்மட் அலியார் பாத்திமா ஜில்ஷா பெற்றுக்கொண்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விசேட பேச்சாளராக அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டு உரையாற்றினார்.