பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எனினும், கிடைக்கப்பெற்ற இந்த இலாபமானது 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிடைத்த அதி கூடிய இலாபமாகும்.
இந்நிலையில் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் மூலிகைச் செடிகளை நடும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானத்தை வழங்கும் நோக்கில் பாரம்பரிய சுதேச மருத்துவ முறை மேம்படுத்தப்பட வேண்டும்.
எனினும், ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தில் முதல் தடவையாக, ‘பொடிமந்திரா’ என்ற சிறப்பு ஆயுர்வேத மசாஜ் முறை அறிமுகப்படுதப்படுகிறது. இந்த மசாஜ் முறை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையாக உள்ளன.
ஆனால் எமது மசாஜ் முறையானது சுதேச ஆயுர்வேத முறை மூலம் பல்வேறு நோய்களை தடுக்கக்கூடியதாக இருப்பதே அதன் சிறப்பாகும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.