ஈரானியப் படைகள் மற்றும் ஈரானின் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவம் பதிலடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஜோர்தானில் நடத்தப்பட்ட ஆளிலில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு குழுக்களை அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா இந்த தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
நாம் தெரிவு செய்யும் நேரங்களில் நாம் தெரிவு செய்யும் இடங்களில் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மத்திய கிழக்கில் அல்லது உலகில் வேறு எந்தவொரு இடத்திலும் மோதல்களை நோக்கி பயணிக்கவில்லை.
ஆனால் அமெரிக்காவுக்கு தீங்கிழைக்க முற்படுபவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் குட்ஸ் படை மற்றும் “இணைந்த போராளி குழுக்களை” இலக்கு வைத்துள்ளன.
இந்தநிலையில், அமெரிக்கப் படைகள் 85 க்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியுள்ளது.
வான்வழித் தாக்குதல்களில் 125 க்கும் அதிகமான துல்லியமான வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.