ஐ. ஏ. காதிர் கான்
நுவரெலியாவுக்கு சுற்றுலா வரும் அதிகளவான வெளிச்சம் மற்றும் சத்தம் உமிழும் பஸ்களால் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நாட்களில் நீண்ட விடுமுறை என்பதால், நுவரெலியா நகருக்கு சுற்றுலா வரும் ஏராளமான பஸ்கள், மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு மாறாக, பஸ் முழுவதும் பிரகாசமான விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும், அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் மூலம் பெரும் சப்தங்கள் உடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
இதன் காரணமாக, நுவரெலியா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், நுவரெலியாவிற்கு வரும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, சட்டத்தை மீறி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாரச்சி தெரிவிக்கையில்,
இனிமேல் நுவரெலியாவிற்கு வரும் இவ்வாறான பஸ்களில் அலங்கார ஏற்பாடுகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆராயப்படும் எனவும், மோட்டார் வாகன ஆணைக்கு மாறாக அந்த பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் செயல்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்றும், இது தொடர்பில் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.