பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நீண்டகாலமாக கண்டி நகரில் கைவிடப்பட்டிருந்த கண்டி நகர மல்டி மொடல் போக்குவரத்து முனையம் (kandy multimodale transit terminal) 3000 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் தற்போது குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. பெருந்தெருக்கள், போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன் இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இடம் பெற்றது.
இதன் பிரதான நோக்கம் கண்டி நகரில் பல்வேறு இடங்களில் காணப்படும் வாகன மற்றும் பஸ், ரயில் சேவைகளை ஓரிடத்திற்கு கொண்டவருவதாகும்.
2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட இருந்த இத்திட்டம் ஆட்சி மாற்றத்தில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக மேற்படி திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனால் கண்டி நகரில் பஸ்களுக்காக வெளியில் இருந்து வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை பொதுமக்கள் பெற்ற பாரிய வெற்றி என ஆளுநர் குறிப்பிட்டார்.
கண்டி வில்லியம் கொபல்லவ மாவத்தை மற்றும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை என்பவற்றிற்கு இடையே கண்டி ரயில் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் 200 மீற்றர் நீளத்தில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
ஒரே கூறையின் கீழ் மேற்படி ரயில் நிலையம், பஸ் தரிப்பிடம் என்பன அமையவுள்ள. இத்திட்டம் நிறைவடைந்ததும் தற்போது கண்டியில் இடம் பெறும் பஸ் சேவைகளை 5000 பஸ்சேவைகளாக உயர்த்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக 330000 பயணிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ள வசதி அளிக்கப்படும். இந்த வேலைத்திட்டம் 2026 டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளதுடன் மேற்படி முனையம் 3 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.