இஸ்மதுல் றஹுமான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரணத்தை நிலைநாட்டுவதே எனது அடுத்த நோக்கு. பொலிஸ் விசாரணையில் உள்ளவற்றையும் கார்தினல் மற்றும் கத்தோலிக்க சபையிடம் உள்ள தகவல்களையும் ஒன்று சேர்த்து ஓரிடத்தில் இருந்து நாம் ஆய்வு செய்வோம். எந்த ஒரு பெரியவர் இதற்கு சம்பந்தம் என்றாலும் நான் கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நீர்கொழும்பில் பிரஜா பொலிஸ் குழு அங்கத்தினர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.
பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு எவன்றா ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் 12 பொலிஸ் நிலைய பிரதேசத்தின் 239 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவின் பிரஜா பொலிஸ் குழுக்களின் அங்கத்தினர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் டிரான் அலஸ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டின் நிலமையை கருத்திற்கொண்டு சவாலை ஏற்று இந்த அமைச்சை பொறுப்பேற்றேன். அப்போது நாட்டின் நிலமை மோசம். கொழும்பில் வீதிகளில் செல்லமுடியாது. சில நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இன்னும் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தொழில்கள் இல்லாமல் போயின. வெளிநாட்டவர்கள் ஒருவர் கூட வரவில்லை. அதனால் சில மாற்றங்களை செய்ய நிணைத்தேன்.
பொலிஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பலப்படுத்துவதே எனது முதல் காரியம். ஜனாதிபதி என்மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை தந்தார். அதனை பயன்படுத்தி பொலிஸாரை பலப்படுத்தினேன்.
48 மணி நேரத்தில் “கோட்டா கோ ஹோம்” இருந்து
சகலரையும் வெளியேற்றி நாட்டின் அமைதியையும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குறிய சூழலையும் உறுவாக்கினேன். அவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் இன்னமும் கேஸ், எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டிய நிலமை இருந்திருக்கும்.
ஜனாதிபதி பொருளாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வரிசை யுகத்தை இல்லாமல் செய்தார்.
எனக்கு இருந்த சவால் பாதால உலகத்தாரையும் போதைப் பொருளையும் கட்டுப்படுத்துவதே. தேசபந்து தென்னகோன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்து தென் மற்றம் மேல் மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக அறிக்கையை பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தேன்.
போதைப் பொருள் விநியோகிக்கும் வலையமைப்பை தகர்ப்பதே எனது குறிக்கோள். அதற்காக தேசபந்து தென்னக்கோனை பதில் பொலிஸ் மாஅதிபராக நியமித்தேன். ஒரு நாள் வேலைத் திட்டத்தில் மக்களை அறிவுறுத்தி “யுக்திய” நடவடிக்கையை ஆரம்பித்தேன்.
போதைப் பொருளை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கும் அதிரடி படையினருக்கும் உத்தரவிட்டேன். அதற்கினங்க தகவல்கள் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்தன.
போதைப் பொருளை பாவிப்பவர்களை மறந்து விடுங்கள். அதனை கொண்டுவருபவர்களை கண்டுபிடியுங்கள். அப்போது விநியோகமும் தடைப்பட்டு பாவிப்பதும் தடைப்பட்டுவிடும் என்றேன். அதனையே டிசம்பர் 17ம் திகதி முதல் செய்து வருகிறோம்.போதைபொருளுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டோம். அவர்கள் சமூகத்திலிருந்து தலைமறைவாக தொடங்கினர். இதனை செய்யும் போது எமக்கு முட்டுக்கட்டைகள் வந்தன. பொலிஸ் மாஅதிபர் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். குடுகாரரின் பணத்தில் வாழ்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும் யூடியுப் ஊடாகவும் எமக்கு எதிராக செயல்படுகின்றனர். சட்டதரணிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சர்வதேசத்திற்கு எழுதுகின்றனர்.இதனை நிறுத்துமாறு ஐ.நா.ச. (UNO) அறிக்கைவிட்டுள்ளது.
நான் போகும் இடம் எல்லாம் எமது நாட்டு மக்கள் இதனை நிறுத்தவேண்டாம் என்று சொல்கிறார்கள். இது எமது நாடு. எமது நாட்டில் நாம் எமது சட்டத்திற்கு அமையவே செயல்படுகிறோம். நான் இந்தப் பதவியில் இருக்கும் வரை சர்வதேசத்தின் தேவைக்கேற்ப நடக்கமாட்டேன். நயவஞ்சகர்கள் சிலர் இந்த நாட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர். குடுவை பிடிக்கவேண்டாம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். நான் யுக்திய நடவடிக்கையை நிறுத்த மாட்டேன்.
பாத்தால உலகத்தினரின் வழக்குகளை பேசும் சட்டதரணிகள் அவர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் பெற்றுக்கொள்கின்றனர்.
பாதால குழுவினர் சொல்லுவது தேசபந்துவை அந்த இடத்திலிருந்து அகற்றித்தாருங்கள். முடியுமாயின் டிரான் அலஸையும் இல்லாமல் ஆக்குங்கள் என்று. இவர்களுக்கு நீங்களே பதில் கூற வேண்டும். அவர்களுக்கு பதிலளிக்க எனது ஐந்து நிமிடத்தையும் செலவழிக்க மாட்டேன். அந்த நேரத்தில் யுக்திய வேலையை செய்யமுடியும்.
பாத்தால உலத்தாரையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் வைக்க முடியாது. அவர்கள் நாட்டுக்கு பாரம். நாட்டிற்கு பாரமானவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கவேண்டும். நான் அவர்களுக்கு சொல்வது வீனாக சாகாமல் இவற்றை நிறுத்துங்கள்.
அடுத்து பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை நிறுத்த வேண்டும். பெண்கள்,சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் ஒரு இலட்சம் அளவு சமூக வலைத்தளங்களில் உழாவுகின்றன. இவ்வாறு சமூகம் வாழமுடியாது. இதற்காகவே புதிய சட்டதிட்டம் கொண்டுவரப்பட்டது. தவறு செய்யாத எவறும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அச்சமடையத் தேவையில்லை. எவரும் உண்மைச் சம்பவங்களை விமர்சிக்க முடியும். தவறான செய்திகளை அன்றி உண்மையான செய்திகளை கொண்டுவரவேண்டும். அவ்வாறானவர்கள் இந்த சட்டத்திற்கு பயப்படத் தேவையில்லை.
பெண்கள் பஸ்களில் பயணிக்க முடியாத நிலமை. அவர்களின் மேல் உறசுகிறார்கள். வீதியில் செல்லும் போது விசில் அடிக்கிறார்கள் அல்லது தூஷன வார்த்தைகளை கூறுகிறார்கள். இவற்றை தடுப்பதற்கு புலனாய்வு துறையினரை பயன்படுத்தவுள்ளேன். இவர்கள் பஸ்களில் பயணித்து அவ்வாறான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாத்தால குழுவினருக்கோ ஊர் சண்டியர்களுக்கோ பயப்படாமல் வெளியே வந்து பொலிஸாருடன் இணைந்து செயல்படுங்கள். தகவல்களை எமக்குத் தாருங்கள். நாம் செய்யவேண்டியதை செய்வோம்.
எனது மூன்றாவது இலக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பானது. நான் முதலில் கார்தினலுக்கு செய்தி அனுப்பினேன். நாம் எல்லோரும் ஒன்றிணந்து
வேலைசெய்வோம். இந்த விசாரணை அறிக்கையை பார்ப்போம். விடைகளை காண்போம் என்று. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பூரணமாக தரவில்லை என கூறிக்கொட்டிருந்தார்கள்.
நான் ஜனாதிபதியுடன் கதைத்து அவரின் அனுமதியுடன் அறிக்கையை முழுமையாக பெற்றுக்கொடுத்தேன். அந்த அறிக்கையின் சில பிரிவுகளை வெளியே கொடுக்க வேண்டாம் என ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நான் முழுமையான அறிக்கையை கத்தோலிக்க சபைக்கு பெற்றுக்கொடுத்தேன். அதனை வெளிப்படுத்தாமல் ஆராய்து பார்ப்போம் என எழுத்து மூலம் அறிவித்தேன்.
விசாரணையில் உள்ளவற்றையும் கார்தினல் மற்றும் கத்தோலிக்க சபையிடம் உள்ள தகவல்களையும் ஒன்று சேர்த்து
ஓரிடத்தில் இருந்து பார்ப்போம் என்று கூறினேன்.
நான் கத்தோலிக்க மக்களுக்கு இன்றும் கூறுவது விசாரணைகளை முடித்து இதில் யாராவது பெரியவர் சம்பந்தப்பட்ட உளளதாக கண்டறியப்பட்டால் எந்தப் பெரியவராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன். கத்தோலிக்க மக்களிடம் வேண்டிக்கொள்வது இதனை கார்தினலிடமும் கத்தோலிக்க சபையிடமும் கூறுங்கள் எம்முடன் ஒன்றாக உட்கார்ந்து பேசுமாறு. எமது விசாரணைகளில் உள்ளவற்றையும் அவர்களிடமுள்ள தகவல்களையும் ஒன்றுதிரட்டி பார்த்து முடிவு செய்வோம்.
இல்லையென்றால் இன்னும் பத்து வருடங்கள் சென்றாலும் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு இதே நிலமைதான் இருக்கும். எல்லோரும் ஒன்று சேர்ந்து இதற்கு முடிவுகாண்போம் என கார்தினலுக்கு கூறுகிறேன்.
கட்டுவபிட்டி மக்கள் என்ன வேதனை அடைந்தார்கள் என்பது எனக்கு புரிகிறது. பாதிக்கபட்ட அந்த மக்களுக்கு சாதாரணம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது அடுத்த நோக்கு. எனவே எம்மோடு கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள் என்றார்.