சுஐப் எம்.காசிம்-
தமிழர்களின் தாயகத்தாகம் தணியவில்லை என்பது தமிழரசுக் கட்சி புதிய தலைவரின் தெரிவில் தென்படுகிறது. கடும்போக்கின் பிடிக்குள் தென்னிலங்கையும் தாயகப்பிடிப்பில் வடக்கும் உள்ளவரைக்கும் சவால்கள் தவிர்க்க முடியாதவை. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக ஸ்ரீதரன் பதவியேற்ற சூட்டோடு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் சந்திப்பு நடத்திய தமிழ் எம்.பிக்கள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இம்மாகாணங்கள் இயங்காதிருப்பது இலங்கை தமிழர்கள் மீதான இந்தியாவின் அக்கறையை அலட்சியம் செய்வதாக அர்த்தப்படுமென இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய மாகாணசபை முறைகளில் பிரிவினைத்தோற்றம் இருப்பதைத் தவிர்ப்பதற்கு ஒற்றையாட்சியை விரும்பும் சிங்கள தலைவர்கள் கவனமாகச் செயற்படுகின்றனர். இதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தன அன்று பயன்படுத்திய அதேபாணியிலான யுக்திகளை காலமாற்றத்துக்கேற்ப இன்றைய ஆட்சியாளர்கள் கையாள்கின்றனர். இதை அவதானித்து வந்த தமிழ் தேசியம், சமயோசித சிந்தனைக்கு வழிவிட்டுள்ளது. இதற்காகவே, தமிழர்களின் தாயகப் பிரதேசங்களிலாவது மாகாண சபைகளைக் கோரியுள்ளனர். இந்திய தலையீட்டில் உருவான மாகாண சபைகளுக்கு இந்திய நிதியுதவியிலாவது தேர்தல் நடத்தப்படுவதுதான் இவர்களின் விருப்பம். இவ்வாறு நடந்து இவ்விரு மாகாண சபைகளும் இயங்கினால் தமிழர்களின் தனித்துவம் தென்படுமென இவர்கள் கருதுகின்றனர்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் அரசியல் அபிலாஷைகளை அடைய முனையும் தமிழ் தேசியத்தின் செயற்பாடுகள் பிழை என்பதற்கில்லை. ஆயுதப் போராட்டத்தால் அடைய முடியாமலான தமிழர்களின் இலட்சியங்கள் எந்த வடிவிலாவது பெறப்படும் என்பதே இவர்களின் நகர்வு. ராஜபக்ஷக்களின் விவாதமும் இதுதான். ஆயுதப்போராட்டம் மௌனித்தாலும் தமிழர்களின் ஏனைய இயங்குதளங்கள் விழிப்பாக உள்ளதாகவே தென்னிலங்கையை இவர்கள் விழிப்பூட்டுகின்றனர். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் அடைந்து வரும் செல்வாக்குகள் மற்றும் இந்திய தொப்புள்கொடி உறவுகள் எல்லாம் இலங்கை ஒற்றையாட்சிக்கு சவாலானவையே!
கனடாவில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகள் தொடருமென்கிறார். 1983இல்,1800 இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் வழங்கிய கனடா, அன்றிலிருந்து இலங்கையின் போக்கை அவதானிப்பதாக எச்சரிக்கும் பாணியில் உரையாற்றினார். தென்னிலங்கையில் வீழ்ந்தோருக்கு கனேடியப் பிரதமரின் உரை ஊன்றுகோலாக அமையலாம்.
அவசரமாகக் கூடிய ராஜபக்ஷக்களின் உயர்மட்டக் குழுவினர் இன்றைய நிலையில், ரணிலை ஜனாதிபதியாக்குவது பொருத்தம்தானா? எனவும் அங்கலாய்த்துள்ளனர். பொருளாதார மீட்சிக்காக ஐரோப்பாவையும் சர்வதேச நாணய நிதியத்தையும் நம்பியுள்ள ரணிலைச் சுற்றிவளைக்கவே தமிழரசுக் கட்சிக்கு கடும்போக்குள்ள தலைவர் தெரிவாகியுள்ளார். தென்னிலங்கை பின்புலமுள்ள சுமந்திரனை தலைவராக்கி எதையும் சாதிக்க இயலாதென புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயலாற்றி உள்ளன. இதனால்தான், தலைவராகத் தேர்வானவுடனேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்குச் சென்று தமிழுணர்வை உயிரூட்டியிருக்கிறார் ஶ்ரீதரன்.
இலங்கை தமிழரசுக் கட்சி புதிய தலைவரின் தெரிவு, தென்னிலங்கை கடும்போக்குகளை உசுப்பேற்றாமலிருப்பதே தமிழ் தேசியத்துக்குள்ள தற்காலிக பாதுகாப்பு. இதை உணரும் வகையிலான செயற்பாடுகளை புதிய தலைமை முன்னெடுக்குமா? வென்றெடுக்க வேண்டிய உரிமைகளில், முஸ்லிம்களுக்கும் சில தனித்துவம் உள்ளதென்ற உணர்வில் இப்புதிய தலைமை பயணிக்குமா? இக்கேள்விகளிலுள்ள பதில்களே இவருக்கான பிரதான சவால்களாகப்போகின்றன.
முஸ்லிம் தலைமைகளுடன் சகவாசமாகப் பழகுவதால் மாத்திரம் இணைந்த அல்லது இயைந்த பயணத்தில் சக சிறுபான்மை சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியாது. எழுபது வருட பாரம்பரியமுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் நகர்த்திய காய் நகர்த்தல்களைப் போன்ற கச்சித பயணத்துக்கு ஶ்ரீதரனும் தயாராவது அவசியம். பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிறுபான்மைச் சமூகங்களை மோதவிடும் ஒற்றையாட்சி விரும்பிகளுக்கு இதுவே பாடமாக அமையும்.
நடைபெறலாமென நம்பப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியத்தின் முடிவுகள் சுயமாக இருக்காது. இந்தியாவின் விருப்பிலான முடிவுகளுக்கு இணங்குவதானால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காவது தேர்தல் நடத்தப்படுவதை இந்தியா உத்தரவாதமாக வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை கோரலாம்.