உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 26.01.2024 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
எனவே, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.