ஐ. ஏ. காதிர் கான்
பெளத்த தேரரை கொலை செய்வதற்காக வந்தவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் தீவைக்கப்பட்டு முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளதாக, தற்பொழுது தெரியவந்துள்ளது.
எனினும், இவ்வாறு தீவைத்தவர்கள் யார்? என்பது பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்
கடுவெல, மல்வத்து ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தேரரைக் கொலை செய்வதற்காக வந்தவர்கள் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் சொகுசு கார் ஒன்று, முற்றாக எரிந்துள்ளதாக நவகமுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்து அச்சொகுசு காரைப் பார்வையிட்டனர்.
எனினும், சந்தேக நபர்கள் இக்கொலைக்குப் பயன்படுத்தியது இதே கார்தானா? என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருவதாக நவகமுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பிலும் நவகமுவ பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.