உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது தற்போது அவசர தேவையாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான ஜீ 77 மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவீன உலகளாவிய சர்வதேச கடன் தீர்வு மாதிரிகளில், பாரிஸ் கிளப் மற்றும் லண்டன் கிளப் என்பவற்றின் கடன் தீர்வு பொதிகள் தொடர்பான கொள்கை உலகிற்கு மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, உலகளாவிய கடன், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன், பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச திறைசேரி முறிச் சந்தையில் உறுப்பினரல்லாத கடன் வழங்குநர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள நிதி வளங்களை, கடன் சேவையாக பெற்றுக்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அத்தியாவசியமான பொது சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தேவையான செலவுகளுக்கு நிதி வசதிகளை வழங்க முடியாமல் போகிறது.
எனவே, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.