புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் 15 ஆம் மைல் கல் பிரதேசத்தில் 20.01.2024 காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான குப்பைகளை ஏற்றும் உழவு இயந்திரத்தில் கடமைபுரியும் ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் , முந்தல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் சென்ற புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்த்திசையில் இருந்து வருகை தந்த காருடன் மோதியதுடன் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முந்தல் வைத்தியசாலையிலிருந்து சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முந்தல் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.