- பல்கலைக் கழக ஸ்தாபகர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பெருமிதம்
மட்டக்களப்பு விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகம், அனைத்து இன மக்களுக்கும் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களுக்குமான ஒரு தலை சிறந்த பல்கலைக் கழகம் என்பதை பெரும் பூரிப்போடு தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு முஸ்லிம் மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் என்ற எவ்விதப் பாகுபாடுமில்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமாகக் கல்வி கற்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகத்தின் ஆரம்ப விழா நிகழ்வுகள், (18) வியாழக்கிழமையன்று, அவரது தலைமையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இச்சிறப்பு நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது,
இப்பல்கலைக் கழகம், இலங்கையில் மாத்திரமல்ல, ஆசிய நாடுகளுக்குள்ளேயே அதிக தொழில்நுட்பத் துறையையும் அதிக வசதிகளையும் கொண்டு, மாணவர்கள் குறைந்த செலவிலேயே கற்பதற்கான ஒரு பூரணமான பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. இங்கு அதிகூடிய வசதிகள் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று, பாதுகாப்பு வசதிகளும் சிறந்த முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு சுமார் 3,000 பேருக்கு அனுமதியுள்ளதாகவும், இவர்களுக்கென நூலகம், தங்குமிட வசதிகள் பொழுது போக்கு, சுகாதாரம், உடற்பயிற்சி, மருத்துவம் எனப் பல்வேறு வசதிகள் கொண்டதான ஒரு சர்வதேச தரத்தில் அமையப்பெற்ற பல்கலைக் கழகமாக விளங்குகிறது.
நாங்கள் இன்று எஸ்.எல்.ரீ. பல்கலைக் கழகத்தோடு இணைந்து, குறித்த பாடத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எதிர்காலத்தில் இம்மாணவர்களுக்கு நாம் நூறு வீதமான உத்தரவாதத்தையும் பெற்றுக் கொடுப்போம்.
இங்கிருந்து வெளியேறுகின்ற மாணவர்கள், தொழில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் நாங்கள் மிகக்கவனமாகவும் கரிசனையோடும் இருக்கின்றோம். அதற்காக நாங்கள் “சிலஸ்கொம்” நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தை முடித்தவர்களுக்காக, ஐரோப்பிய நாடுகளிலுள்ள நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களையும், இப்பல்கலைக் கழகம் பெற்றுத்தரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இப் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்து சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், மீண்டும் இன்று இப் பல்கலைக் கழகத்தைத் திறந்துள்ளோம். இதனை மீண்டும் திறக்க வேண்டுமென்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்ததுடன், அவரே முன்வந்து, உடனடியாகத் திறப்பதற்கான உதவிகளையும் செய்தார். அதற்காக ஜனாதிபதிக்கும், அவரது அரச உத்தியோகத்தர்களுக்கும் என்றென்றும் நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
மாணவர்களுக்கான பல்கலைக் கழக நுழைவு அனுமதிப் பத்திரங்கள், சம்பிரதாயப் பூர்வமாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. முதலாம் கட்ட அனுமதியின்போது, நாடளாவிய ரீதியிலிருந்து மூவினத்தையும் சேர்ந்த 700 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
குறித்த பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில், மட்டக்களப்பு விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், குறித்த பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தின சேகர, எஸ்.எல்.ரீ.சி. பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் வேரஞ்சன் கருணா ரத்தின, எஸ்.எல்.ரீ.சி. யின் தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி சம்பத் டி. கல, எஸ்.எல்.ரீ.சி. யின் தலைமை அதிகாரி கலாநிதி அஸ்மின், “செலாஸ் கொம்” நிறுவன முன்னாள் தவிசாளர் ஆஷிக் முஹம்மத் அலி, பல்கலைக் கழக முகாமையாளர் எஸ்.எம். தாஹிர் உள்ளிட்ட அதிதிகள், பிரமுகர்கள் பலரும் இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.