ஐ. ஏ. காதிர் கான்
சீனாவில் தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும், மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக , அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள தேசிய குடிசன புள்ளி விவரப் பணியகம் இது தொடர்பில் குறிப்பிடும் போது,
சீனாவில் 2023 இல் மாத்திரம் முழு மக்கள் தொகையில் 2.75 மில்லியன் மக்கள் குறைவடைந்துள்ளதாகவும், இது கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் துரித வீழ்ச்சியை நோக்கிச் செல்வதைக் காண்பிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் 1961 இல் இடம்பெற்ற பாரிய தொற்று தாக்கத்தின் பின்னணியிலேயே இவ்வாறாக மக்கள் தொகை வெகு சீக்கிரம் குறைவடைய பிரதான காரணமாக இருக்கலாம் என்று, சீன அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதேவேளை, சீன அரசினால் 1980 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் “ஒரு குழந்தை மாத்திரம்” என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்ட நடைமுறையினாலும் இவ்வாறு சனத்தொகையின் பாரிய வீழ்ச்சியைக் காண முடிவதாகவும், குறிப்பாக சீன நகரத்தை மையப்படுத்தியுள்ள இத்தாக்கத்தை துரித பெறுபேறாகக் கண்டுகொள்ள முடியும் என்றும் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சீன இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் வாய்ப்பின்மை, புதிய வீட்டுத் திட்டங்களுக்கு கேள்வி அதிகரித்துள்ளமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, புதிதாகத் திருமணம் முடிக்கும் தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் ஆர்வம் காட்டாமல் அசிரத்தையாக இருப்பதும், சீனாவில் சனத்தொகை இவ்வாறு வெகுவாகக் குறைவடைவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் சீன அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் சில வருடங்களில் சீனாவில் ஓய்வூதியம் பெறும் மக்களின் தொகை சீக்கிரம் அதிகரிக்கும் என்றும், இதன்பிரகாரம் எதிர்வரும் காலங்களில் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர், ஓய்வு பெற்றுச் செல்லக் காத்திருப்பதாகவும், புதிய ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.