எதிர்கால நோக்குடன் புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் என்பன இணைந்து சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகத் துறையினருடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பிரதான கடன் வழங்குநர்கள் கொள்கையளவில் அதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை தொடர்பான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம், 2024ஆம் ஆண்டு இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நகர்வதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், கடன் வழங்குநர்களை கையாள்வதில் அவ்வாறான ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் சேவைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.