மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் 16.01.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறியும் மோதி விபத்துக்குள்ளாகி, முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.