கொழும்பு
நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று (16) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த நடவடிக்கையால் மருத்துவமனை கட்டமைப்பை பாதித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவுகள் 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை (17) காலை 8 மணி வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையை தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரை மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.