இஸ்மதுல் றஹுமான்
பாரிய அரசியல் கூட்டணியின் முதலாவது பகிரங்கக் கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி ஜா- எல நகரில் நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நீர்கொழும்பு, கட்டான தொகுதிகளின் தனது ஆதரவாளர்களை நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் சந்தித்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் இம் மாத இறுதிக்குள் சிறி லங்கா சுதந்திரக்
கட்சியுடன் உத்தியோகபூர்வமாக கூட்டிணையும் நடவடிக்கை இடம்பெறும். இந்தக் கூட்டணி சரித்திரத்தில் பாரிய அரசியல் கூட்டணியாக அமையும். இதன் முதலாவது பகிரங்கக் கூட்டம் 27ம் திகதி ஜா-எல இல் நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகளிலிருந்து சுயேற்ச்சையான பாராளமன்ற உறுப்பினர்கள் 71 பேர் உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் எமது புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள உள்ளனர். இந்த புதிய கூட்டணி அரசியல் கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இக் கூட்டணி அமைப்பது ஒரு கட்சியையோ தனி நபர் ஒருவரையோ வெற்றிபெறச் செய்வதற்கு அன்றி நாட்டையும் நாட்டுக்கு உகந்த கொள்கையையும் வெற்றிபெறச் செய்வதற்காகும்.
இந்த புதிய கூட்டணியின் சின்னம் கதிரை அல்லது வெற்றிலையாக இருக்கும் என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் நம்பப்படுகின்றது.இச்சந்திப்பில் அமைச்சர் நளின் பிரனாந்தும் கலந்துகொண்டனர்.