பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
வற் வரிக்கு பதிவு செய்யாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிக்கும் மோசடி வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அரச நிதித் திணைக்கள வரி தொடர்பான ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற வெட் விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வற் வரி செலுத்த வேண்டும். இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறவிடப்படும் வற் தொகையை பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வர்த்தகர்கள் வழங்க வேண்டும்.
வசூலிக்கப்படும் வற் வரியானது மேற்படி திணைக்களத்திற்கு வழங்காவிட்டால் அத்தகையவர்களுக்கு நபர்களுக்கு எதிராக வற் சட்டத்தின் பிரகாரம் நிதியமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும்.
வற் வசூலிக்கத் தகுதியான வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
வற் வரியை அறவிட்டு விநியோகிக்கும் பற்றுச் சீட்டுக்கள் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் தயாரித்த மாதிரி வடிவத்தின் படி நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும், வற் வரிக்கு பதிவு செய்யாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிக்கும் மோசடி வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
இதுபோன்ற தவறுகளைச் செய்பவர்களுக்கு எதிராக அபராதம் வசூலிக்கவும் , பாவனையாளர்களிடம் இருந்து அறவிட்ட வற் வரியை அரசிற்கு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.