பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இந்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை குறையும் என இலங்கையின் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எல் நினோவின் காலநிலை மாற்றங்களின் விளைவுகளை இலங்கை இன்னமும் எதிர்கொண்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியின் போது விளக்கினார்.
எல் நினோ தொடர்பான காலநிலை மாற்றங்கள் குறித்த முந்தைய தரவுகளின் அடிப்படையில், மழை நிலைமைகள் குறைந்து ஜூன் அல்லது ஜூலைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மழை அதிகரிப்பது வழமையாக காணப்படுகின்ற அதேவேளை, இலங்கையில் எல் நினோவின் தற்போதைய தாக்கங்களை கணக்கிட்டதன் பின்னர் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மழை குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் மழையுடனான காலநிலை பெருமளவு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டல திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.