ஐ. ஏ. காதிர் கான்
சந்தையில் பாண் தூள்கள் மற்றும் பழைய அரிசி வகைகளை அரைத்து, பெரும் தூள் மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடிக் கும்பல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள கடைகளில் இவ்வாறான மிளகாய்த் தூள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு, பலாமரத்தடி (கொஸ்கஸ்) சந்திப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இந்த மோசடிக் கும்பல் இயங்கி வருவதாகவும், இதற்காக புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து அகற்றப்பட்ட பாண் தூள்கள் மற்றும் பழைய அரிசி பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளதாகவும் நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
புறக்கோட்டையில் உள்ள கடைகளுக்கு, இக்கலவைகளுடன் மிளகாய்ப் பொடி கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் சேவை அதிகார சபை, பொதுமக்கள் நன்கு பரிசீலனை செய்து இவ்வாறான பொருட்களை வாங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.