பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
2024 புத்தாண்டு தொடங்கிய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டு தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிடத்தை மேம்படுத்தும் அமைப்பு வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்(ஜனவரி முதல் மார்ச்) ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு(UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நாடுகளின் மக்கள் 178 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
அவற்றை தொடர்ந்து, சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன,
இதன்படி இந்த நாட்டவர்கள் விசா இல்லாமல் 177 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெல்ஜியம், போர்த்துகல், போலந்து, அயர்லாந்து மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டில் 176 நாடுகள் விசா இல்லாமல் பயணம் செய்வதோடு, பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.
5வது இடத்தில் சிங்கப்பூர், கிரீஸ், செக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், ஹங்கேரி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டன.