ஐ. ஏ. காதிர் கான்
வெயாங்கொடை – ஓகொடபொல “ஜீனியஸ் கிட்ஸ்” ஆங்கில சிறார் கல்வி நிலையத்தின் 12 ஆவது வருடாந்த சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா நிகழ்வு, கடந்த (2023.12.23) சனிக்கிழமை, கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கல் கேட்போர் கூடத்தில், நிலையத்தின் ஸ்தாபகரும் பொறுப்பாளருமான றிஸ்னா ஹனீபா தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதன்போது, சிறார்களின் ஆங்கில அறிவுத் திறன்களை வெளிப்படுத்தும் பேச்சுப் போட்டிகள் மற்றும் சிறார்களின் ஆங்கிலப் பாடல்களுடனான கலை கலாசார நடன நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
இச்சிறப்பு நிகழ்வில், ஆங்கிலப் பேச்சு மற்றும் நடன பரிசோதகரும் ஆசிரியையுமான சிஹாரா டயஸ் பண்டாரநாயக்க பிரதம அதிதியாகவும், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவியும் ஆசிரியையுமான எம்.எம்.கே. மௌபியா கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததோடு, ஆங்கில எழுத்து மற்றும் வாய்மொழி மூலமான போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
அத்துடன், இந்நிகழ்வில் பங்கேற்றி சிறப்பித்து வைத்தமைக்காக, பிரதம அதிதி சிஹாரா, கௌரவ விருந்தினர் மௌபியா ஆகியோருக்கு, ஆங்கிலக் கல்வி நிலைய ஸ்தாபகர் றிஸ்னா, நினைவுச் சின்னங்களை வழங்கி பாராட்டி கௌரவித்தமையை விசேடமாகக் குறிப்பிட முடியும்.
இக்கல்வி நிலையத்தில், சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் தரம் ஆறு வரையிலான ஆங்கிலக் கல்விப் போதனைகள், மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவதாகவும், இதேவேளை இச்சிறார்களுக்கு ஆங்கில எழுத்து மற்றும் வாய்மொழி மூலமான பயிற்சிகள், மிக அவதானத்துடன் துள்ளியமாக வழங்கப்பட்டு, அவர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு பிரதேசங்களில் இடம்பெறும் ஆங்கில மொழி மூலமான பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த பாரிய பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பெற்றோர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் நல்குவதாகவும், இக்கல்வி நிலையத்தின் ஸ்தாபகரும் பொறுப்பாளருமான றிஸ்னா ஹனீபா தெரிவித்தார்.