ஐ. ஏ. காதிர் கான்
வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் (02) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்றைய (02) நிலவரத்தின் படி, கெரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும், பீட்ரூட் ஒரு கிலோ 380 ரூபாவாகவும், கோவா கிலோ ஒன்றின் மொத்த விலை 500 ரூபாவாகவும், பீன்ஸ் கிலோ ஒன்றின் மொத்த விலை 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, வெண்டைக்காய், தக்காளி மற்றும் ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் நான்கு மடங்காக தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மரக்கறி வகைகளின் நான்கு மடங்கான விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் காய்கறிகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரக்கறி வகைகள் உற்பத்தியாகும் நுவரெலியாவிலேயே இவ்வாறு விலையேற்றம் என்றால், அங்கிருந்து தம்புள்ளை, பேலியகொடை, வெயாங்கொடை போன்ற இடங்களில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வந்து விற்பனையாகும் காய்கறி வகைகளின் விலைப்பட்டியல், அவற்றைவிட இன்னும் இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டும் என, இப்பிரதேச மக்கள் தற்போதே அங்கலாய்த்து வருவதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.