ஐ. ஏ. காதிர் கான்
2024 ஆம் ஆண்டிற்கான “அஸ்வெசும” விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள், ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடும்போது, நாம் “அஸ்வெசும” திட்டத்தினை விரிவுபடுத்த உழைத்து வந்தோம். இதுவரை எங்களால் 1,410,000 ரூபா வரையிலான கொடுப்பணவுகளை மக்களுக்குச் செலுத்த முடிந்துள்ளது. நாங்கள் அதிக பண வீக்கத்தைக் கொண்டிருந்த நிலையிலும், அந்தக் கொடுப்பனவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், எதிர்காலத்தில், எஞ்சியுள்ள வெற்றிடங்களைத் தவிர்த்து, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் மீளவும் “அஸ்வெசும” விண்ணப்பங்களைக் கோர எண்ணியுள்ளோம். அப்போது ஒரு புறம் பொருளாதாரம் மீண்டு வரும். அத்துடன், சீர்திருத்த செயல்பாட்டின் போது, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் மக்கள் குழு உள்ளது. குறுகிய காலத்தில், அவர்களைக் கவனிக்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்றார்.