ஐ. ஏ. காதிர் கான்
இலங்கையில் இயங்கி வரும் பிரபல நிறுவனமான கிரியேட்டிவ் பூல்
( CREATIVE POOL ) அமைப்பின் மூன்றாவது அகவை நிறைவு விழா, அக விழி சஞ்சிகை வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நிகழ்வுகள், 2023 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு பல்கலைக் கழகக் கலை கலாச்சார பீடத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் பணிப்பாளர் அஷ்பாக் ஆதில் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி ஆளுமைக்கான விருதை, கொட்டாரமுல்லையைச் சேர்ந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரி மாணவர் மௌலவி முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத் (கபூரி) பெற்றுக்கொண்டார்.
முஹம்மத் ஷரீப் – ஹைருன் பாரிகா ஆகிய தம்பதிகளுக்கு மூத்த புதல்வராகப் பிறந்த இவர், கல்வித்துறையில் மாத்திரமல்லாமல், சர்வதேச அளவில் கலைத்துறையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
விளையாட்டுத்துறையிலும் சாதித்து வரும் இவரது ஆளுமைகளை, ஆசிய சாதனைப் புத்தகத்தின் நிர்வாகம் அங்கீகரித்து “கிரேண்ட் மாஸ்டர்” ( Grand Master ) என்ற தடத்தையும் பதிவு செய்திருக்கிறது.
அத்துடன், 2023 டிசம்பர் 30 ஆம் திகதி முதல் இவர், உலகளாவிய அமைதி வலையமைப்பின் இலங்கையின் உலக அமைதித் தூதுவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.