ஐ. ஏ. காதிர் கான்
புலனாய்வு அமைப்புக்களால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, பாதாள உலகக் குழுவினர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என சுமார் 2000 அரச அதிகாரிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மக்களின் பாதுகாப்பு நிறுத்தப்படும் வரை, பாதாள உலகத்தை ஒடுக்குவது கடினமாகும் எனவும், அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரினால் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளை விடுவிப்பதற்காக, பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் தலையிட்டது, கிட்டத்தட்ட முப்பது வழக்குகள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள பாதாள உலகக் குழுவினர் இருப்பதாகத் தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள், அந்த அரசியல்வாதிகளிடம் இருந்து இவர்களுக்கு உயர் பாதுகாப்பு கிடைப்பதாகத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
சில பாதாள உலகக் குழுக்கள், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்புக்காக மாதாந்தச் சம்பளம் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 100 க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள், தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
இவர்கள், இரகசியமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உதவியுள்ளதாகவும், புலனாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பாதாள உலகக் குழுவினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவி செய்யும் மீன்பிடி படகு உரிமையாளர்கள் குழுவொன்று தொடர்பில், ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நாட்களில் இது சம்பந்தமான பல விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.