பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நாட்டில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நாட்டில் உள்ளுர் தேங்காய் உற்பத்தியை 1000 மில்லியன்களாக அதிகரிப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
தற்போது வருடாந்த தேங்காய் உற்பத்தி 3600 மில்லியன் தேங்காய்கள் எனவும் அதில் 1800 மில்லியன் தேங்காய்கள் வருடாந்த நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
கைத்தொழில்களுக்கு மேலும் 600 மில்லியன் காய்கள் தேவைப்படுவதாக தெரிவித்த அமைச்சர், இந்த இடைவெளியை ஈடுகட்ட ஒரு மரத்தில் இருந்து பெறப்படும் அளவை குறைந்தது இரண்டு தேங்காய்களாவது அதிகரிக்க வேண்டும் என்றார்.
மேலும், வெட்டுக்கிளிகள் மற்றும் குரங்குகளால் வருடாந்தம் அழிக்கப்படும் தேங்காய்களின் அளவு 250 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சூரியவெவ விகாரகல கிராமத்தில் நூறு விவசாய குடும்பங்களுக்கு இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தென்னைச் செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 தென்னஞ்செடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.