ஐ. ஏ. காதிர் கான்
“வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும்” என, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரமே, இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும்.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு, யாரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வெளிநாடு செல்வது தொடர்பான போலி விளம்பரங்களிலோ அல்லது போலி முகவர்களிடமோ சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் செல்வதாயின், முதலில் நம்பிக்கையான முகவர்களைத் தேர்ந்தெடுக்குமாறும், அதன் அடுத்த கட்டமாக பணியகத்தின் சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செல்லுமாறும், பணியகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிநாடு செல்பவர்களின் பணத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்து, அவர்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல்களைத் தவிர்ப்பதுமே பணியகத்தின் பிரதான குறிக்கோள் என்றும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.